2024 ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்தத் தொடரின் 7 வது போட்டி நேற்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்தது.
பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி கொடுக்கப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.