உள்நாட்டு தொழில்நுட்பத்தில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போர் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ. எம்.கே.1ஏ) பெங்களூரில் நேற்று வானத்தில் பறந்து, பல்வேறு சாகசங்களை அரங்கேற்றியது. முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதியவகை விமானத்தில் அதிநவீன மின்னணு ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போர்புரிவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், அதிகநவீன தகவல்தொடர்பு சாதனங்கள், கூடுதல் பதில் தாக்குதல் திறனுடன் கூடிய கருவிகள், மேம்படுத்தப்பட்ட பராமரிப்ப அம்சங்களும் புதிய வகை விமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
18 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த போர் விமானத்தை ஓய்வுபெற்ற தலைமை சோதனை விமானிக் குழு கேப்டன் கே.சி.வேணுகோபால் செலுத்தினார். விமானத்தின் சோதனை வெற்றி பெற்றதை எச்.ஏ.எல். அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆர்வாரம் செய்து கொண்டாடினர்.
தேஜஸ் போர் விமானத்தை வடிவமைத்து, மேம்படுத்துவதில் எச்.ஏ.எல். சிறப்பான உற்பத்தி சாதனையை புரிந்துள்ளது. இந்த வகை போர் விமானங்களை கொள்முதல் செய்ய எச்.ஏ.எல். நிறுவனத்துடன் இந்திய விமானப் படை 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு, புவிசா அரசியல் சூழல் சாதகமாக இல்லாத நிலை ஏற்பட்டது.
எனினும், எல்.சி.ஏ. எம்.கே.1 ஏ வகை தேஜஸ் விமானத்தை வடிவமைத்து, தயாரித்துள்ளது பெரும் சாதனையாகும். இதற்கு ஒத்துழைத்த மத்திய பாதுகாப்புத் துறை, இந்திய விமானப் படை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேஜஸ் எல்.சி.ஏ.எம்.கே.1ஏ போர் விமானம் வெகுவிரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். எச்.ஏ.எல். நிறுவனத்தின் 3 உற்பத்தி மையங்களில் இந்த வகை விமானங்களை விரைவாக தயாரித்து தருவோம் என எச்.ஏ.எல். நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் சி.பி.அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.