இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மஹேந்திரா சிங் தோனி தனது கேப்டன் பதவியை வளர்ந்து வரும் வீரரான ருதராஜ்-யிடம் கொடுத்தார்.
இதனால் சற்று சோகத்தில் இருந்த ரசிகர்கள் அவர் கேப்டன்சி பார்க்கவில்லை என்றாலும் கூட அவரின் பேட்டிங்கை பார்க்கலாம் என்று மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோனி பேட்டிங் செய்ய இறங்கவில்லை. அதற்கு காரணம் அவர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
இம்பாக்ட் வீரர் விதியால் சிவம் துபே கூடுதல் பேட்ஸ்மேனாக களமிறங்குவதால் தோனி தனது வழக்கமான ஏழாவது இடத்தில் இருந்து இன்னும் பின்னே சென்று எட்டாவது இடத்திற்கு சென்றிருக்கிறார்.
என்னதான் எட்டாவது வரிசை என்றாலும் சில போட்டிகளில் அவரை முன்னே பேட்டிங் செய்ய அனுப்பலாம் என சிஎஸ்கே நிர்வாகம் நினைத்தாலும், தோனி அந்த விஷயத்தில் கறாராக இருக்கிறார் என்கிறார்கள்.
தற்போது சிஎஸ்கே அணி அதிரடி பேட்டிங்கிற்கு மாறி இருக்கிறது.
ஒவ்வொரு வீரரும் 150 ஸ்ட்ரைக் ரேட்டை எளிதாக தொட்டு விடுகிறார்கள். ரச்சின் ரவீந்திரா இதுவரை தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஜடேஜா பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி தனது முதல் ஐபிஎல் போட்டியில் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதிரடியில் முத்திரை பதித்து இருக்கிறார்.
இப்படி சிஎஸ்கே வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கும் போது தான் அதை கெடுக்கும் வகையில் இடையே சென்று பேட்டிங் ஆடப் போவதில்லை என்ற எண்ணத்தில் தோனி பேட்டிங் வரிசையில் முன்னிலையில் களமிறங்கவில்லை.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணி விரைவாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் லீக் சுற்றின் கடைசி சில போட்டிகளில் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற தோனி சில போட்டிகளில் பேட்டிங் செய்வார்.ஆனால், அதுவும் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை பொறுத்தே இருக்கும் என்று கூறப்படுகிறது.