தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை, 11 நாட்கள் தள்ளிப்போகிறது.
இது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கையாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், வரும், 2 ஆம் தேதி தொடங்கி, 12ஆம் தேதி முடியும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ரம்ஜான் பண்டிகை, 10ம் வகுப்பு தேர்வு, தெலுங்கு, தமிழ் புத்தாண்டு விடுமுறை, தேர்தல் என, பல்வேறு காரணங்களால், இரு தேர்வுகள் மாற்றப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 10ஆம் தேதி நடத்துவதாக குறிப்பிடப்பட்டு இருந்த அறிவியல் பாடத்தேர்வு, ஏப்ரல் 22ஆம் தேதி நடக்கும்.
ஏப்ரல் 12ஆம் தேதி நடத்துவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு, ஏப்ரல் 23 ஆம் தேதி நடத்தப்படும். இதன்படி தேர்வுகளை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய அட்டவணைப்படி, ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தேர்வு அட்டவணை மாற்றத்தால், கோடை விடுமுறை, ஏப்ரல் 24ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடதக்கது.