மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதை மட்டுமே திமுக நோக்கமாகக் கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான தமிழிசையை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
மிகுந்த அரசியல் அனுபவமும், நிர்வாக அனுபவமும் மிக்க தமிழிசை சௌந்தரராஜன், தென்சென்னையின் பிரச்சினைகள் அனைத்திற்கும் நிச்சயம் ஒரு தீர்வாக இருப்பார்கள் என்பது உறுதி. ஒரு சாதாரணப் பெண்மணி, தனது கடின உழைப்பால், தமிழக பாஜக தலைவராக உயர்ந்து, இரண்டு மாநிலங்களின் முதல் குடிமகளாக பெரும் அங்கீகாரம் பெற்று, மக்களுக்குச் சேவை செய்வதற்காக, பொதுமக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தென்சென்னை பாராளுமன்றத் தொகுதிக்கு வந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக, தென்சென்னை மக்களுக்குக் கிடைக்காத பெரும் வாய்ப்பு, தேசிய அளவில் செல்வாக்கு மிக்க அக்கா அவர்கள் மூலம் நிச்சயம் கிடைக்கவிருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு, ரூ.1,860 கோடி, மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்ட பணிகளுக்கு ரூ.9,000 கோடி வழங்கியுள்ளார். மேலும், சென்னை பெங்களூரு விரைவு சாலை உட்பட ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
சமீபத்தில் மேலும் ரூ.20,000 கோடிக்கான திட்டங்கள், சென்னை மதுரவாயல் மேம்பாலப்பணிக்கு ரூ.5,855 கோடி, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.3,000 கோடி, சென்னைக்கு மட்டுமே வழங்கப்பட்ட முத்ரா கடனுதவி ரூ. 11,187 கோடி, சென்னை வெள்ளம் பாதித்த முதல் நாளே ரூ.560 கோடி, சென்னை வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்கப்பட்டதில், ரூ.5,400 மத்திய அரசின் நிதி என சென்னைக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கிய நிதி உதவிகள் ஏராளம்.
ஆனால், சென்னைக்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை என்று பொய் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிவாரண நிதியில் இன்னும் இருப்பு இருக்கிறது. மக்களுக்கான வரிப்பணம் மக்களுக்குத்தான் மத்திய அரசு கொடுக்குமே தவிர, கோபாலபுர கஜானாவை நிரப்புவதற்கு அல்ல. மழைநீர் வடிகால் அமைப்போம் என்று கூறி ரூ.4,000 கோடி நிதியை என்ன செய்தார்கள்? 90% பணிகள் முடிவடைந்து விட்டன என்று கூறி, மழை நீரில் மக்கள் அவதியுற்றதும், 40% பணிகள்தான் நிறைவடைந்துள்ளது என்று கூறியது திமுக.
தற்போது, அடையாறு ஆற்றைச் சுத்தம் செய்ய இரண்டு வருடங்களாக ரூ.1,500 கோடி வீதம் ரூ.3,000 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். இத்தனை அதிகமான நிதியில் புதிய ஆற்றையே உருவாக்கிவிடலாம். மக்களை ஏமாற்றி, மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதை மட்டுமே திமுக நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
சென்னையை முழுவதுமாக மீட்டெடுக்க, சென்னையின் அடித்தட்டு மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்கள் நேரடியாகப் பொதுமக்களைச் சென்றடைய, மக்களுக்காகப் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னையை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டதோடு மட்டுமல்லாமல், மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களுக்கு உதவக் கூட முன்வரவில்லை.
ஐந்து ஆண்டுகள் தொகுதிப் பக்கமே வராமல், தற்போது தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து மக்களைச் சந்திக்கும் அவர்களை, மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்குத் தாமரை சின்னத்தில் வாக்களித்து, மிகப்பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.