கோவை தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளளார்.
இன்றைய தினம், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருப்பூர் மாவட்டம், மாதப்பூர், பொங்கலூர், காட்டூர், வளையபாளையம் பகுதிகளில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மாதப்பூர், பொங்கலூர், காட்டூர், வளையபாளையம் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவி ஏற்பது உறுதி.
நமது பிரதமர் அவர்களை, நமது கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, ஏப்ரல் 19 அன்று நடைபெறும் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், போட்டியிடும் பாஜக தொண்டனான அண்ணாமலை ஆகிய எனக்கு, தாமரை சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது பிரதமர் மோடி அவர்களை பயன்படுத்தி, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவேன்.
மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினரான நூறு நாட்களில், பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், ஐந்து இடங்களில், தரமான மருந்துகளை, மலிவு விலையில் வழங்கும் மக்கள் மருந்தகங்கள் கொண்டு வரப்படும்.
பல்லடம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, அவற்றிலிருந்து, குழாய் மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுப்போம். கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில், 500 இடங்களில், இ-சேவை மையங்கள் அமைக்கப்படும்.
கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகளுக்கான தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்படும்.
உலகத் தரமான, கட்டணமற்ற கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகள் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பெயரில், தமிழகத்தில் நிச்சயம் கொண்டு வரப்படும். தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக திமுக நடத்தும் எதிர்ப்பு நாடகங்களை முறியடித்து, முதல் நவோதயா பள்ளி, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்குக் கொண்டு வருவோம்.
இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் வீணாகாமல் பாதுகாக்கவும், சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தப் பகுதியில், குற்றங்கள் அதிகமாக இருப்பதால், புறக்காவல் நிலையங்கள் வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருக்கிறது. எனவே புறக்காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
1958 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு தீரும். இதற்குத் தேவைப்படும், 10,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற்று, நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தொகுதியில், கான்கிரீட் வீடுகள் இல்லாதவர்களுக்கு, மத்திய அரசின் மோடி வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். வளையபாளையத்தில் மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதியை எடுத்து சமூகக்கூடம் அமைக்க திமுக முயற்சி செய்தது. அந்த நிதியை மீட்டு, மருத்துவமனை அமைத்துத் தரப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக, வெற்றி பெற்ற நூறு நாட்களில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டு வந்த கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், ஒவ்வொரு கிராமங்களிலும், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
வளையபாளையத்தில், 35 ஆண்டுகளாக பிரச்சினையில் இருக்கும் திரௌபதியம்மன் ஆலயத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மக்கள் வழிபட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நடைபெற இருப்பது மாநிலத்துக்கான தேர்தலோ, உள்ளாட்சித் தேர்தலோ அல்ல. நாட்டிற்கான தேர்தல். பிற கட்சிகளுக்கு வாக்களிப்பதால், எந்தப் பலனும் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. தமிழக இளைஞர்கள், தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில், தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்தார்.