2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், 13-வது ஆட்டத்தில், 20 ரன்கள் வித்தியாசத்தில், டெல்லி அணி சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். வார்னர் 52 ரன்களுக்கும், பிரித்வி ஷா 43 ரன்களுக்கும் வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய மிட்சேல் மார்ஷ், ஸ்டப்ஸ் இருவரும் பத்திரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 191 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே – டேரில் மிட்செல் ஆகியோர் நிதானமாக விளையாடி, ரன்களை சேர்த்தனர். இவர்களில் ரஹானே 45 ரன்களிலும், மிட்செல் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஷிவம் துபே 18 ரன்களிலும், சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இறுதியாக ஜோடி சேர்ந்த ஜடேஜா – தோனி இணை அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
வந்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசிய தோனி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 16 பந்துகளில், 4 பௌண்டரி, 3 சிக்சர்களை விளாசி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.