திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதனால், திமுகவினர் தேர்தல் பணியில் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றனர். அத்துடன், காங்கிரஸ் தொண்டர்களும் கோஷ்டி மோதல் காரணமாக, மனசோர்வில் உள்ளனர். மேலும், பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார். இதனால், பாஜக வேட்பாளருக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடி வருகிறது.
இதனால், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர், நெல்லை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், பஞ்சல், பெருமணல், இடிந்தகரை, கூடுதாழை, உவரி, கூத்தங்குழி, கூட்டப்பனை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இங்கு மட்டும் 35,000 -க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாக்கு உள்ளன. இதனைக் குறிவைத்து, திமுக காய்நகர்த்தி வருகிறது.
அந்த வகையில், கூடங்குளம் பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். அப்போது, அவரை கிராம மக்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பினர்.
பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை முறையாகக் கிடைக்கவில்லை என்றும், நெல்லை துாத்துக்குடியில் கடந்த டிசம்பரில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா, ரூ. 22,500 வழங்கவில்லை என்றும், குறிப்பாக, கடல் அரிப்பில் இருந்து வீடுகளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்கவில்லை என்றும் முறையிட்டனர்.
மீனவ மக்களின் ஆவேசம் காரணமாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.