மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி நகரில், நேற்றிரவு வீசிய புயல் மற்றும் கனமழையால், ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். .
மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று மாலையில் புயல் காற்று மற்றும் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல புயல் காற்றின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால், அப்பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தது.
அங்கு உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆங்காங்கே மரங்களும் சாய்ந்து விழுந்தன.
கடுமையாக வீசிய புயல் மற்றும் கனமழையால், ஒரு பெண் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த பகுதிகளில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.