சென்னை பல்லாவரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவு தொடர்பாகக் கடந்த 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான தகவலை திமுகவும், காங்கிரஸ் கட்சியும் பரப்பி வந்தது.
கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்வின் ஓர் அங்கம். நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கச்சத்தீவை பற்றி பேசக்கூடாது என்றால் எப்படி. உரிமை இருப்பதால்தான் பேசுகிறோம்.
கச்சத்தீவு ஒரு தொல்லை என்று முன்னாள் பிரதமர் நேரு தெரிவித்தார். இந்திரா காந்தியோ கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றார்.
இது தொடர்பாக, 1974 -ம் ஆண்டு வெளியுறவு செயலாளர் எடுத்துக் கூறியும், அன்றைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொது மக்களுக்கு உண்மைகள் தெரியவேண்டும் என்பதற்காகவே இதை வெளியிடுகிறோம்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடை விதித்தபோதும் காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்யும்போது திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது 21 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள்.
யார்யார் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் கட்சி தீர்மானிக்கும். எங்கள் கட்சி உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்றவர், தொடர்ந்து பேசினார்.
மத்திய அரசு சென்னைக்கு ரூ.5,000 கோடி சிறப்பு நிதி வழங்கி உள்ளது. வெள்ள பாதிப்புக்காக ரூ.9,00 கோடி வழங்கியுள்ளோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது எனத் தெரியவில்லை. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்.
மத்திய அரசு வழங்கிய ரூ.5,000 கோடியை முறையாக செலவு செய்து இருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது. மோடி அரசிடம் நிவாரண நிதி வரவில்லை என்கிறார்கள். திமுகவினர் உண்மையைப் பேசவேண்டும்.
போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலை மிகவும் வருத்தமாக உள்ளது. தவறு செய்பவர்கள், அதற்கு துணை போனவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.