யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மூலம், கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகம் உள்ளது. இதனால் மனிதர்கள் முதல் வலங்குகள் வரை கடுமையாக பாதிக்கப்படுகிறோம்.
இந்நிலையில், திருச்சிராப்பள்ளி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில், யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.
யானைகளின் உடல் உஷ்ணத்தை குறைக்க வனத்துறையினர், யானைகளின் மீது தண்ணீரை பீச்சியடித்தும், நீச்சல் குளங்களில் குளியல் போன்றவற்றை செய்து வருகின்றனர். மேலும் தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்களை யானைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர்.
யானைகள் மீது தண்ணீர் விழும் வகையில், ஷவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குழிகள் ஏற்படுத்தப்பட்டு சேறு இருக்குமாறும் அதில் யானைகள் சேற்றுக்குளியல் போட வசதியும் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து வனத்துறை கால்நடை மருத்துவர் கலைவண்ணன் கூறுகையில்,
“எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடத்தி வருகிறோம். இங்கு தற்போது 11 யானைகள் உள்ளன. இந்த யானைகள் உரிமம் இல்லாத தனியாரிடமும், யானைகளை பராமரிக்காத தனியார்களிடம் இருந்து கொண்டு வரப்பட்டது.
இங்கு 2019 முதல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. யானைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் எங்களிடம் உள்ளன. கால்நடை மருத்துவர் பரிந்துரைத்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுகளுடன் யானைகளுக்கு தினசரி உணவளிக்கிறோம்.கால்நடை மருத்துவர் ஒவ்வொரு வாரமும் வந்து யானைகளின் உடலை சோதனை செய்கின்றனர். மேலும் யானைகளுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.