தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில், 7.4 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று காலை 5.28 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த பூகம்பம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அதிர்வுகள் தைவான் மட்டுமின்றி, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூகம்பத்தால், கிழக்கு ஹுவாலியன் உட்பட பல்வேறு நகரங்களில், கட்டடங்கள் குலுங்கின. பல்வேறு கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
மேலும், சில கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர். தற்போது, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நகரங்களில், மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தைப்பேவில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், பல்வேறு நகரங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. .
சேதமடைந்த பகுதிகளில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. பூகம்பத்தால், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். . பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.