சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 13 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிஜப்பூர் மாவட்டத்தின் கோர்சோலி வனப் பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் கமாண்டோ பிரிவான கோப்ரா ஆகியவை இணைந்து கடந்த 1ம் தேதி முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனத்தில் பதுங்கி இருந்த நக்சலைட்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 133 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடந்திருக்கும் பிஜப்பூர் மாவட்டம், பஸ்தர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு 2024 பொதுத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஸ்தர் பகுதியின் ஐஜி சுந்தர்ராஜ்,
“நக்சல்களுக்கு எதிரான பெரிய நடவடிக்கைகளில் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி இரவு முதல் பிஜப்பூர் மாவட்டத்தின் லேந்தரா, கோர்சோலி வனப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 13 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெரிய எண்ணிக்கையில் நக்சல்கள் காயமடைந்திருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்த இடம், நக்சலைட்டுகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்துள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினரின் 16 புதிய முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன்மூலம், பாதுகாப்புப் படையினர் மிகவும் நெருக்கமாக கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு இரவிலும் தெரியக்கூடிய பைனாகுலர்கள், புதிய வகை ஆயுதங்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன. அவர்கள் மூலம்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நக்சலைட்களின் இரண்டாவது பெரிய படைப்பிரிவான மேற்கு பஸ்தரின் கங்கலூர் ஏரியா கமிட்டி எனும் நக்சல் அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் நேற்று 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இன்று காலை மேலும் 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.