திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தொரவலூர் பகுதியில் அருள்மிகு கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக, பங்குனி மாதத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருவிழாவையொட்டி, கடந்த 18 -ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்வுடன் விழா தொடங்கியது.
இந்த நிலையில், திங்கட்கிழமை சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. முக்கிய விழாவான பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில், அக்கம் பக்கம் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, முனியப்ப சாமிக்கு 150 கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் 500 -க்கும் மேற்பட்ட கிடாய்களை வழங்கினர். இதில், 150 கிடாய்கள் வெட்டப்பட்டு 15 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு பறிமாறப்பட்டது.