சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்த தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் வரும் 5 ஆம் தேதி ஐதராபாத்தில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தாபிசுர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்காளதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பரிசீலனை முடிவடைந்த உடன் அவர் வரும் 7 அல்லது 8 ஆம் தேதிகளில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் 8ம் தேதி இந்தியா திரும்புவதாக இருந்தால் அவர் அன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியையும் தவற விட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.