முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் பெட்டிகளை, ஆகஸ்ட் மாதத்துக்குள் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தயாரிப்பு நிறுவனம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து, மேலும் சில ஆளில்லா மெட்ரோ ரயில்களை சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் தயாரிப்பு நிறுவனம் ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ரயில்கள் வரும் 2025-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. இவை கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே இயக்கப்பட உள்ளது.
சென்னையின் முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, முதல் கட்டத் திட்டப் பணிகள் முடிவடைந்து, விமானநிலையம் – விம்கோ நகா், பரங்கிமலை – சென்ட்ரல் என இரு வழித்தடங்களில், 54 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில், 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 3 வழித்தடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கட்டமாக, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடத்தில், 45.8 கிலோமீட்டர் தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையிலான நான்காவது வழித்தடத்தில், 26.1 கிலோமீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூா் வரையிலான, ஐந்தாவது வழித்தடத்தில், 47 கிலோமீட்டர் தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடைபெறுகின்றன.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் 3 பெட்டிகளை கொண்ட முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும், அடுத்த 2 மாதத்தில், 6 ரயில்கள் தயாரிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், இதற்கு முன்னதாக, தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களில் தொழில்நுட்ப ரீதியிலான பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நான்காவது வழித்தடத்தில் கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையேயான முதல்கட்ட சேவையை 2025-ஆம் ஆண்டில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களை நிறுத்திவைக்க பூந்தமல்லியில் பணிமனை கட்டப்பட்டு வருகிறது.
தானியங்கி ரயில்கள் குறித்து கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாமல், இயக்கப்படும் தலா 3 பெட்டிகளைக் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ள இந்த ரயிலில், சுமார் 1,000 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.