தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக எழுந்த புகாரின் பேரில், தனியார் பள்ளிகள் இயக்குநர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில், அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும், வாகனத்தில், சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு, அந்த காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும் என்றும், ஓட்டுநர்களுக்கு தினமும் சுவாச சோதனை செய்த பின்னரே பள்ளி வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்ரல் 5 -ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) உத்தரவிடப்பட்டுள்ளது.