இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகம் நடத்த அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 7ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது .
புதுசேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கலாச்சார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் கலாச்சார விழா நடத்தப்பட்டது.
அதில் எழிலி 2k24-யில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகம் ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் விதத்தில் இருந்ததாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நாடகத்தில் சீதை, ஹனுமன் போன்ற தெய்வங்கள் போல் வேடமிட்டு அவர்களை அவமதிக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது இந்த நாடகத்தில் சீதை ராவணனுக்கு மாட்டிறைச்சி வழங்குவதாகவும், ஹனுமானின் கதாபாத்திரத்தை சிதைத்தும் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த நாடகத்தில் சீதை ராவணனுடன் நடனமாடுவது போலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் மத நம்பிக்கைகளையும், தெய்வங்களையும் இழிவுபடுத்தி நாடகம் நடத்த பல்கலை கழக வளாகத்தில் அனுமதி கொடுத்த அதிகாரிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த நாடகத்தை உருவாக்கிய குழுவினர், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென புதுச்சேரி அரசை வலியுறுத்தி, ஏப்ரல் 7ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.