கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி – கோவை மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06030) இயக்கப்பட்டு வருகிறது. இது திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.
மறுமார்கமாக கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே, வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் – 06029) இயக்கப்படுகிறது. இது மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமைகளில், இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரயில் சேவை கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலை வருகிற மே மாதம் வரை நீட்டித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவை மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்:06030) வரும் 7-ஆம் தேதி முதல் மே மாதம் 26-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும், திருநெல்வேலியில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடையும்.
இதேபோல மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06029), வரும் 8-ஆம் தேதி முதல் மே மாதம் 27-ஆம் தேதி வரை திங்கட்கிழமை தோறும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.