காங்கிரஸ் ப.சிதம்பரம், ராகுல் தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு சோமனூர் உட்பட்ட பல பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
சோமனூரில் ஜவுளி சந்தை கொண்டு வரப்படும் என மத்திய அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கிறேன். விசைத்தறியாளர்களுக்கு உதவும் பவர் டெக்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்.
சோமனூர் ரயில் நிலையமும் அம்ரித் பாரத் திட்டத்தில் இணைத்து ரயில் நிலையத்தையும் விரிவாக்கம் செய்ய முயற்சி செய்யப்படும். நொய்யல் ஆறு சுத்தம் செய்ய மத்திய அரசு 970 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இந்த ஆறு சுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு சுணக்கம் காட்டுகிறது. மக்களின் பிரச்னைகளை பாஜக கட்சியால் மட்டுமே தீர்க்க முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.
இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. ப.சிதம்பரம், ராகுல் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர்; அவர்கள்தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக இருக்கிறது. பிரதமர் வருகை இன்னும் உறுதியாகவில்லை; முடிவானதும் சொல்கிறேன், எனக் கூறினார்.