வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 7வது முறையாக மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக நீடிக்கிறது.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான மாதாந்திர தவணையில் எவ்வித மாற்றமும் இருக்காது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதனால், ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்.
இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 5 முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் அதற்கும் முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரச் செய்தது.
இந்நிலையில் நடப்பாண்டில் பிப்ரவரியில் நடந்த முதல் கூட்டத்தில் முந்தைய வட்டி விகிதமே நீடிக்கும் எனத் தெரிவித்தது. இந்நிலையில் இன்று நடந்த இரண்டாவது கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ்,
“பணவீக்கம் 4.5 சதவீதம் என்றளவில் நிலவுகிறது. நிதி நிலைமைகள் சாதகமாக இருக்கின்றன. அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச்சில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி சூழலுக்கு ஏற்ப வளைந்துகொடுத்து நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறது. அதேவேளையில் பணச் சந்தையின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பொருத்தமான உத்திகளை நிச்சயமாகப் பயன்படுத்தும். இவற்றின் அடிப்படையில் ரெப்போ விகிதம் மாற்றப்படவில்லை. நிலவும் சூழல்களின்படி 2025 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.