தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியின் வாகனத்தை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. பொதுமக்கள், ஆளும் கட்சி அமைச்சர்கள் உட்பட என அனைத்து வாகனங்களும் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய காரை பறக்கும் படையினர் திடீரென வழிமறித்து தீவிர சோதனை செய்தனர்.
இந்த சோதனை நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி காரில் இருந்து வெளியே வரவில்லை என்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்யும் வரை அவர் காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்.
இதனை அடுத்து காரில் எந்தவிதமான பணம் மற்றும் ஆவணங்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே எடப்பாடி பழனிச்சாமி காரை செல்ல பறக்கும் படை அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.