தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ரூ.168 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் 700க்கும் மேற்பட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் சென்றால் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் காவலர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ரூ.74 கோடி ரொக்க பணமும், மதுபான வகைகள் ரூ.3.9 கோடி, போதைப்பொருள் வகைகள் ரூ.78 லட்சம், தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.74 கோடி மற்றும் பரிசு பொருட்கள் ரூ.15 கோடி என கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை ரூ.168 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.