நாட்டின் குடியரசுத் துணைத் தலைவருடன் எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில், ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் நிற்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி உட்பட 14 போ் கடந்த வியாழக்கிழமை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன், பதவியேற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், குடியரசுத் துணைத் தலைவருடன், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனித்தனியாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அந்த வகையில், குடியரசுத் துணைத் தலைவருடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த புகைப்படத்தில், ராகுல் காந்தி, குடியரசுத் துணைத் தலைவரின் நாற்காலியில் ஒரு கையை வைத்து, சற்று சாய்ந்தவாறு பொறுப்பற்ற நிலையில், நிற்பதை காணலாம். நாட்டின் குடியரசுத் துணைத் தலைவருடன் எடுக்கப்பட்ட ஒரு குழு புகைப்படத்தில் ராகுல் காந்தி பொறுப்பற்ற நிலையில், நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.