மேற்கு வங்க மேதினிபூர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்க சென்ற என்ஐஏ அதிகாரிகள் மீது இப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மேதினிபூர் மாவட்டம் நர்யபிலா கிராமத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக சோதனை நடத்த என்ஐஏ குழு இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்றது. அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் என்ஐஏ அதிகாரிகள் கிராமத்திற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் என்ஐஏ அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார். அவர்கள் சென்ற வாகனங்களின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன.
பின்னர் அதிரடியாக நுழைந்த என்ஐஏ அதிகாரிகள், பாலை சரண் மைதி மற்றும் மனோபிரதா ஜனா ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டனர்.