மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை மோசடி தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெலுங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.