மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, வரும் 9 மற்றும் 10 -ம் தேதிகளில் பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பாரதப் பிரதமர் மோடி வருகைதர உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்கிறார். செல்லும் வழியில் பொது மக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, 10-ம் தேதி வேலூர் செல்கிறார். அங்கு கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
பிரச்சாரம் நிறைவு பெற்ற பின்பு, கோவை செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் பொள்ளாச்சி செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
பிரச்சாரம் நிறைவு செய்த பின்னர், கோவை செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிரா மாநிலம் செல்கிறார்.