திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார். இண்டி கூட்டணியை கடுமையாக சாடிய அவர், பாதி தலைவர்கள் ஜெயிலிலும், எஞ்சியவர்கள் பெயிலிலும் உள்ளதாக அவர் கூறினார்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி,ப சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜக காத்து வருவதாகவும், ஆனால் திமுக,காங்கிரஸ் அவற்றை ஒழிக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாரதம் பொருளாதாரத்தில் உச்சம் பெறும் என்றும் நட்டா கூறினார்.