‘அறுமுகச் சிவன்’ என்றுப் போற்றப் படுகிற ஆறுமுகப் பெருமானுக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதே போல அவன் முருகப் பெருமானின் தந்தை, சிவபெருமானுக்கும் படை வீடுகள் உண்டு. ஒன்றல்ல இரண்டல்ல. எட்டுப் படை வீடுகள் ஈசனுக்கு இருக்கின்றன .
திருவதிகை வீரட்டானேஸ்வரர், நாவுக்கரசு என்று சிறப்புப் பெயர் சூட்டிய அப்பர் பெருமான் தம் தேவாரத்தில், அந்தப் படை வீடுகளை வரிசையாக நமக்கு சொல்லித் தருகிறார்.
காவிரியின் கரைக்கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம், காமருஞ்சீர் அதிகை
மேவீய வீரட்டானம், வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம், விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம், குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானமிரை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே!
என்று சிவபெருமானின் எட்டுப் படைவீடுகளைப் பட்டியலியிடும் அப்பர் சுவாமிகள், இந்தப் படைவீடுகளை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் திருப்பாட்டின் இறுதியில் சொல்லி விடுகிறார்.
மேலே உள்ள பாட்டின் பொருள் வருமாறு: திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை , திருவழுவூர், திருப்பறியலூர், திருக்கோவிலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி ஆகிய எட்டுத் தலங்களில் சதாசிவ மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் பைரவப் பெருமானை, நாவார வழுத்தி வழிபடும் பக்தர்களை எக்காலமும் எமதர்மன் நெருங்கிடான். இவர்கள் அடியவர்கள் எனவே சிவபெருமானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆகவே எமன் இவர்களைக் கண்டால் அஞ்சி வணங்கி ஒதுங்கிப் போவான்.
எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் உயிர்கள் மீது கொண்ட கருணையால் எட்டு வீரச் செயல்கள் புரிந்த இடமே – அட்ட வீரட்டம் .
பிரமனின் தலைகொய்த வீரச்செயல் புரிந்த திருக்கண்டியூர், எமனைக் காலால் உதைத்த
திருக்கடவூர், முப்புரம் எரித்த செயல் புரிந்த திருவதிகை, கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் திருவழுவூர், தக்கனின் ஆணவத்தை அழித்த திருப்பறியலூர், அந்தகாசுரனை வாதம் செய்த திருக்கோவிலூர், மன்மதனை எரித்த வீரச் செயல் புரிந்த திருக்குறுக்கை, ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி.
இந்த அட்ட வீரட்டத்து தலங்களில் எல்லாம் வீரட்டானேஸ்வரர் சுவாமி அழைக்கப்படுகிறார். நாமும் இந்த வீரட்டானேசுவரை வழிபட்டு வாழ்வில் நல்வழி செல்வோம் .