பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சித்திரை பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
இதனையொட்டி இன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பட்டு, கொடி மரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கோவிலின் பிரகாரத்தில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருவார். அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
வரும் 15-ஆம் தேதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
வரும் 19-ஆம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. வரும் 23-ஆம் தேதி இரவு அம்மன் தங்கக்கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.