சோபகிருது வருடம் பங்குனி மாதம் 26 ஆம் தேதி அதாவது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி ஏற்படும் சூரிய கிரகணம் முழுமையான சூரிய கிரகணம் ஆகும் .
இது சோபகிருது வருடத்தில் வரும் கடைசி சூரிய கிரகணம் ஆகும். சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தாக்கங்கள் நிச்சயம் நம் எல்லோருடைய வாழ்விலும் பிரதிபலிக்கும் .
மீன ராசியில், ரேவதி நக்ஷத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் உள்ள கிரக நிலைகளைக் காண்போம்.
அன்றைய நாளில், சூரியனும் ராகுவும் சந்திரனும் மீன ராசி -ரேவதி நக்ஷத்திரத்தில் நிற்பார்கள். புதன் மேஷ ராசி அஸ்வினி நக்ஷத்திரத்திலும், குரு மேஷ ராசி பரணி நக்ஷத்திரத்திலும், செவ்வாய் கும்ப ராசி சதயம் நக்ஷத்திரத்திலும், சுக்கிரன் மீன ராசி உத்திரட்டாதி நக்ஷத்திரத்திலும், சனி கும்ப ராசி பூரட்டாதி நக்ஷத்திரத்திலும், கேது கன்னி ராசி அஸ்தம் நக்ஷத்திரத்திலும் நிற்பார்கள்.
மேலும் அன்றைய நாளில் சந்திரன் அஸ்தங்கமாகவும், புதன் அஸ்தங்கமாகி, வக்கிரமாகவும் இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரப் படி சொல்வதென்றால், இந்த சூரிய கிரகணத்தால் பாதிப்படையாத கிரகங்கள் குரு, செவ்வாய் மற்றும் சனி மட்டுமே .
இதனால் புதனின் நக்ஷத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள், இந்த நக்ஷத்திரங்களில் லக்னப் புள்ளி இருக்க பிறந்தவர்கள், புதன் தசை நடப்பில் இருப்பவர்கள் மேலும் மீன ராசி, மேஷ ராசி, மிதுன ராசி, கடக ராசி, கன்னிராசி, விருச்சிக ராசி, கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
ஏப்ரல் 8 ஆம் தேதி நடக்கும் இந்த சூரிய கிரகணத்தால், அதிர்ஷ்டம் அடிக்கப் போகிற ராசிகளில் முதல் ராசி எது என்று கேட்டால் அது மகர ராசி தான், மகர ராசி காரர்களுக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். இனி தொட்டதெல்லாம் வெற்றிதான் .
ரிஷப ராசி மற்றும் துலா ராசியினருக்கும் இந்த சூரிய கிரகணம் வாழ்வில் மிகப் பெரிய நல்லது நடக்கப் போகிறது .
எல்லாம் சரி என்ன பரிகாரம் செய்யலாம் என்றால், முதல் தாய் தந்தையை வழிபட வேண்டும், வயதில் மூத்த பெரியவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும், அவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும், ஓம் நமசிவாய என்னும் அஞ்செழுத்து மந்திரம், ஓம் நமோ நாராயணா என்னும் எட்டெழுத்து மந்திரம் ஓதவேண்டும். ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலிசா படிக்க வேண்டும்.