முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடுவை குற்றவாளி என்று பொருள்படும் வகையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் வர்ல ராமையா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.