மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை, 5 நாட்களாகியும் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். சிறுத்தை பிடிபடாததால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே கடந்த 2-ஆம் தேதி இரவு நேரத்தில் பொதுமக்கள் சிலர் சிறுத்தை நடமாடுவதை பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுத்தை நடமாடிய பகுதிகளில், சென்சார் பொருத்திய கேமராக்களுடன் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வன, வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், சிறுத்தையை பிடிக்க பல்வேறு ராட்சத கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதில், ஆடுகளை வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். இருந்தபோதிலும், சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. ஐந்து நாட்களாகியும் சிறுத்தை பிடிபடாததால், அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.