கர்மவீரர் காமராஜர் அவர்களுக்குப் பிறகு, நீர் மேலாண்மைக்காக யாரும் உழைக்கவில்லை. அதன் விளைவு, இன்று கிராமப் பகுதிகளில் வறட்சி எட்டிப் பார்க்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்ளிட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, கரடிவாவி, காரணம்பேட்டை, லட்சுமி மில்ஸ், சுக்கம்பாளையம், இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பொழுது தொண்டர் ஒருவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை வழங்கினார். ஆட்டுக்குட்டி பெற்ற அண்ணாமலை, தாய் ஆடுடன் ஆட்டுக்குட்டியை சேர்த்து வைக்ககும் மாறு அண்ணாமலை தெரிவித்து ஆட்டுக்குட்டியை திரும்ப கொடுத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
வரும் ஏப்ரல் 19 அன்று நடைபெறவிருப்பது, நாடாளுமன்றத்துக்கான, நாட்டின் பிரதமர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. அவரது கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியை இதற்கு முன்பிருந்த கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டார்கள்.
பாஜகவின் அரசியல், அடுத்த தலைமுறைக்கான அரசியல். லஞ்சம் ஊழல் இல்லாத, குடும்ப அரசியல் இல்லாத அரசியல் மாற்றம் நிச்சயம் வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கும் அரசியல்.
கடந்த பத்து ஆண்டுகளில், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நமது பாரதப் பிரதமரால்தான், நமது உள்ளூர்ப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். தமிழகத்தில் கடந்த 33 மாதங்களாக ஆட்சியில் இருக்கும் திமுகவோ, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுகவோ எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல், தற்போது, நாட்டின் பிரதமருக்கான தேர்தலிலும், அதே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை, இப்போது மட்டும் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்.
உள்ளூர்ப் பிரச்சினைகளான, காரணம்பேட்டையில் கல்குவாரி பிரச்சினைக்குத் தீர்வு, காரணம்பேட்டை பேருந்து நிலையத்தை, மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கும் லஞ்சத்தை ஒழித்து, லாரித் தொழிலைக் காக்க நடவடிக்கை, மற்றும் பொதுப் பிரச்சினைகளான, நூல் விலையேற்றம், மின்சாரக் கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி மற்றும் கைத்தறித் தொழிலை மீட்டெடுக்க, சோமனூரில் ஜவுளிப் பூங்கா அமைப்பது, மத்திய அரசின் பவர்டெக்ஸ் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டு வருவது, நூல் விலையேற்றத்தைக் குறைக்க நூல் வங்கி அமைப்பது, உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி, கைத்தறி, விசைத்தறிப் பிரச்சினைகளுக்கு, ஒரு ஆண்டில் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.
கர்மவீரர் காமராஜர் அவர்களுக்குப் பிறகு, நீர் மேலாண்மைக்காக யாரும் உழைக்கவில்லை. அதன் விளைவு, இன்று கிராமப் பகுதிகளில் வறட்சி எட்டிப் பார்க்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால், கடுமையான வறட்சிக்கு நமது கொங்கு பகுதி சென்று விடும்.
அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தடுக்க, விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நமது பல்லடம் சூலூர் பகுதிகளில், ஆனைமலை நல்லாறு திட்டத்தையும், பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். சுமார் 70 ஆண்டுகளாக, தமிழகத்தில் ஆட்சியில் இருந்து கட்சிகள் நிறைவேற்றாத இந்தத் திட்டங்களை, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கவனத்துக்குக் கொண்டு சென்று, ரூ.10,000 கோடி நிதி பெற்று முழுமையாக நிறைவேற்றி, நமது கோவை பாராளுமன்றத் தொகுதி, வறட்சியால் பாதிக்கப்படாமல் காப்போம் என்றும் உறுதி அளிக்கிறேன்.
தமிழகம் முழுவதும் எட்டு மாத காலம், என் மண் என் மக்கள் யாத்திரையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பயணம் செய்திருக்கிறேன். தமிழகம் முழுவதும், நமது மக்கள், லஞ்ச ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள், ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இல்லாமல், முழுமையாக, மக்களுக்காக நிறைவேற்றப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நமது பாரதப் பிரதமர் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்திட, நமது கோவை பாராளுமன்றத் தொகுதி வளர்ச்சி பெற்றிட, நாம் இம்முறை தாமரை சின்னத்துக்கு வாக்களித்து, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.