சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உட்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. பல்வேறு நகரங்களிலும், ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 8, 23, 28 ஆகிய நாட்களிலும், அடுத்த மாதம் 1, 24, 26 ஆகிய நாட்களிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையில் மற்றும் அடுத்த மாதம் 12-ஆம் தேதி 1.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விக்டோரியா ஹாஸ்டல் சாலைக்கு பாரதி சாலையில் இருந்து, வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை x பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை X பெல்ஸ்சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ்சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை X பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ்சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதிசாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் M,T,V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.
வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜா சாலை வரும் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் M,T,V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். மேலும், காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.