டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, அணுகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு பயணிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 5-ஆம் தேதி குஜராத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மலான், கஷ்யப் குமார் ஆகிய இருவர், டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் விமானத்திற்கு ஏறுவதற்கு முன்பாக, விமான நிர்வாகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் 2-ஆம் கட்ட சோதனை செய்துள்ளனர்.
சோதனை செய்த பாதுகாவலரிடம், ஏற்கெனவே சோதனை செய்துவிட்டதாக இருவரும் கூறியுள்ளனர். இது எங்களின் வழக்கமான சோதனைதான் என்று பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, இரு பயணிகள் ஒருவர், நான் அணுகுண்டு எடுத்து வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள், பயணிகளின் பாதுகாப்பு கருதி இருவரையும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரண்டு பயணிகளையும் கைது செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.