ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி துர்கேஷ் பாடக்குக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரான பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மேலும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி துர்கேஷ் பாடக்குக்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் பிபவ் குமாரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.