பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகர் பார்க் செல்லும் பிரதமர், வாகன பேரணியில் பங்கேற்கிறார்.
அப்போது சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
அப்போது தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை பால் கனகராஜ், மத்திய சென்னை வினோஜ் பி.செல்வம், திருவள்ளூர் பொன்.பாலகணபதி, அரக்கோணம் கே.பாலு, காஞ்சிபுரம் வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதூர் வி.என்.வேணுகோபால் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்லும் மோடி, அங்கு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதனைத்தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து பிரதமர் கோவைக்கு செல்கிறார். அங்கிருந்து, மேட்டுபாளையம் செல்லும் பிரதமர், அமைச்சர் எல்.முருகனுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.