2024 ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை அணி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற 22-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, சென்னை அணியின் பந்து வீச்சில் சுருண்டது. கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 137 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களும், சுனில் நரைன் 27 ரன்களும், ரகுவன்ஷி 24 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சென்னை அணியில் மிக சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
138 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 17.4 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்தது. இதில், அதிரடியாக விளையாடிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், 67 ரன்கள் அடித்து, இறுதி வரை களத்தில் இருந்தார்.
இதன் மூலம், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சென்னை அணி அபார வெற்றி பெற்றது. .