முடியாதது எதுவுமில்லை என உலகிற்கு இந்தியா எடுத்துக்காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகம் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தியா காட்டி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா , மொராதாபாத், ராம்பூர் மற்றும் பிலிபித் ஆகிய தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பிலிபட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து போது, உலகத்திடம் உதவி கேட்கும் நிலை இருந்தது. ஆனால், கோவிட் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து தடுப்பூசி மற்றும் மருந்துகள் சென்றது.
உலகின் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்தபோது, நீங்கள் அதை நினைத்து பெருமைப்பட்டீர்களா இல்லையா? சந்திரயான் நிலவில் மூவர்ணக் கொடியை ஏற்றியபோது நீங்கள் பெருமைப்பட்டீர்களா இல்லையா? இந்தியாவில் நடைபெற்ற மாபெரும் ஜி20 உச்சி மாநாடு உலகம் முழுவதும் பாராட்டப்பட்டதா? இல்லை? என மோடி கேள்வி எழுப்பினார்.
நாடு வலுப்பெறும் போது, உலகம் அதைக் கேட்கும் என மோடி கூறினார்.தன்னால் முடியாதது எதுவுமில்லை என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா எடுத்து காட்டுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.