நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் முதற்கட்டத் தேர்தல் 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 13 மாநிலங்களில் ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்டத் தேர்தல் 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டத் தேர்தல் 8 மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இதில் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள், 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் மற்றும் 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்தியாவில் மொத்தமாக 543 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ளன. இதில் 84 சீட்டுகள் எஸ்.சி பிரிவினருக்கும், 47 சீட்டுக்கள் எஸ்.டீ பிரிவினருக்கும் மீதமுள்ள 412 சீட்டுக்கள் பொது சீட்டாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 97 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 49.7 கோடி ஆண் வாக்காளர்களும், 47.1 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 48,000 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் 18-வது மக்களவை தேர்தலில் 18-19 வயது நிரம்பிய 1.8 கோடி இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 85 லட்சம் பெண் வாக்காளர்களாக உள்ளனர். அதே போல் 20 – 29 வயதில் உள்ள 19.74 கோடி இளைய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர்.
மேலும், 85 வயதை கடந்த 82 லட்சம் வாக்காளர்களும், 100 வயதை கடந்த 2.18 லட்சம் வாக்காளர்களும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 8 லட்சம் மாற்று திறனாளிகள் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.
மேலும் இந்த தேர்தலில் போட்டியிட 2798 கட்சிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 6 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், 58 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் 2019 ஆம் ஆண்டு 67.4% வாக்குகள் பதிவாகியது, இந்த முறை அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று நம்பப்படுகிறது.