பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். இதில் கோவையில் அண்ணாமலையும், நீலகிரி தொகுதியில் எல்.முருகனும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பிரதமர் மோடிக்கு தாமரை மாலை அணிவித்து பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார். ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும். 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம். 5 ஆண்டு நமக்காக பிரதமர் மோடி உழைப்பார். மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக சென்று திமுகவின் ஊழலை சொல்லுங்கள் என பாஜக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.
உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் நரேந்திர மோடி என புகழாரம் சூட்டினார். கடுமையான உழைப்பாளி என்பதால் ஓய்வின்றி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்தித்து வருகிறார். 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என தமிழக மக்கள் மோடியை ஆசீர்வதிக்க வேண்டும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் நரேந்திர மோடி என அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை விட்டு தாண்டவிடாமல் செய்தது தி.மு.க. தான். ஜனநாயகத்தை பற்றி தி.மு.க.வினர் எங்களுக்கு பாடம் எடுக்கக் கூடாது. இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் உண்டு என்றால் அது ஆ.ராசா தான். பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசிய ஆ.ராசா நீலகிரியில் டெபாசிட் கூட வாங்கக் கூடாது எனத் தெரிவித்தார்.