இந்தியாவின் நிலவு ஆய்வு முயற்சிகளை முன்னேற்றும் நோக்கில், சந்திரயானின் அடுத்த கட்ட திட்டம் உருவாகப்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் இன்று தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ சோம்நாத்,
“சந்திரயான்-4 என்பது சந்திரயான் தொடரின் தொடர்ச்சியாக நாம் இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு திட்டம். 2040-ல் இந்தியா நிலவில் மனிதரை தரையிறக்கும் என்று நமது பிரதமர் அறிவித்துள்ளார். அது நடக்க வேண்டும், அதற்குப் பல்வேறு வகையான நிலவு ஆய்வுகளை நாம் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
“சந்திரயான்-4 திட்டத்தின் முதல் படி…. நிலவில் விண்கலனை தரையிறக்கி அங்குள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இது சந்திரனுக்குச் சென்று பூமிக்கு வருவதற்கான முழு சுழற்சியை நிரூபிக்கிறது” என்று கூறினார்.
“ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் திட்டங்கள் முதல் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்கள் வரை இஸ்ரோ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பெரிய திட்டங்கள், ராக்கெட் திட்டங்கள், செயற்கைக்கோள் திட்டங்கள், பயன்பாட்டு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்கள் அடுத்தடுத்து செயல்பட உள்ளன.
ராக்கெட் திட்டங்கள் 5-10, செயற்கைக் கோள் திட்டங்கள் 30-40, பயன்பாட்டு திட்டங்கள் 100 அதோடு R&D திட்டங்கள் 1000 செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.
2040-ல் ஆண்டிற்குள் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கும் வகையில் இந்தியாவின் சந்திரயான்- 4 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.