தலைசிறந்த தமிழ் எழுத்தாளர், சொற்பொழிவாளர், சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜகன்னாதன், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பிறந்தார்.
இவர் இளம் வயதிலேயே திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி உள்ளிட்டவற்றை மனப்பாடமாகக் கூறுவார்.
அதேபோல் இவர் எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிதம்பரம் நடராஜர் மீது ‘போற்றிப் பத்து’ என்ற பதிகத்தை தனது 14 ஆம் வயதில் எழுதினார். மேலும் இவர் முருகன் மீதும் பல பாடல்கள் எழுதியுள்ளார்.
இவர் பள்ளியில் இறுதி வகுப்பு படிக்கும்போது முடக்குவாதம் ஏற்பட்டதால் படிப்பு தடைபட்டது. இதனால் இலக்கியத்தின் மீது முழு கவனம் செலுத்தினார்.
இவர் ‘ஜோதி’ என்ற புனைப்பெயரில் எழுதிய கவிதைகள் பிரபல இதழ்களில் வெளியாகின. காந்தமலை முருகன் கோயில் திருவிழாவில் இவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு, அனைவரையும் கவர்ந்தது.
பின்னர் இவர் சென்னையில் உ.வே.சா.வுடன் தங்கி, குருகுல முறையில் தமிழ் பயின்றார். பின்னர் ‘வித்வான்’ தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறி திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசைப் பெற்றார்.
மேலும் இவர் பேச்சாற்றல், சிலேடைப் பேச்சால் அனைவரையும் வசீகரித்தார். இவை பல நூல்களாகவும் வெளிவந்தன. நாடோடிப் பாடல்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.
பல கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களைப் பாடச் சொல்லிக் கேட்டு, குறிப்பெடுத்தார். அவற்றைத் தொகுத்து, நூலாக வெளியிட்டார்.
இவர் 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 22,000-க்கும் மேற்பட்ட பழமொழிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
ஏற்றப் பாடல்கள், திருமணப் பாடல்கள், தமிழ்ப் பழமொழிகள், நாட்டுப்புறவியல் குறித்து ஆராய்ந்து எழுதிய மலையருவி உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவரது வீரர் உலகம்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
இவர் வாகீச கலாநிதி, செந்தமிழ்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் பெற்றார். திறனாய்வாளர், உரையாசிரியர், கவிஞர், பதிப்பாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், கதாசிரியர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட கி.வா.ஜ. 82-வது வயதில் 1988 ஆம் ஆண்டு மறைந்தார்.