சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஈவிகே சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில், பணிகள் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம், ஈவிகே சம்பத் சாலையில் உள்ள நாராயண குரு சாலை சந்திப்பு முதல் ஜெர்மியா சாலை சந்திப்பு வரையில், சாக்கடை வடிகால் பணியை மேற்கொள்ள இருப்பதால், 13-ஆம் தேதி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, EVK சம்பத் சாலையில் உள்ள ஹண்டர்ஸ் சாலை நாராயணகுரு சாலை சந்திப்பிலிருந்து EVK சம்பத் சாலை ஜெர்மியா சாலை சந்திப்பு வரையிலும் தற்காலிகமாக மூடப்படுகிறது.
ஹண்டர்ஸ் சாலையில் டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் ஜெனரல் காலின்ஸ் சாலை, மெடெக்ஸ் சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம்.
ஹண்டர்ஸ் சாலையில், டவுட்டன் சந்திப்பில் இருந்து வரும் MTC பேருந்துகள் மற்றும் வணிக வாகனங்கள் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்று அவர்கள் இலக்கை அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.