சோழ நாட்டு சிவத்தலங்களில் முக்கியமான திருத் தலமாக விளங்குகின்ற இத் திருத் தலத்தின் புராணக் காலப் பெயர் திருப் பறியலூர் என்பதாகும்.
இறைவனுக்கு நன்றி மறந்த பாவத்தை செய்த தேவர்களின் தீவினைகளை எல்லாம் இறைவன் தகுந்த தண்டனை கொடுத்து பறித்ததால் காரணப் பெயராக இத்தலம் பறியலூர் என்றே அழைக்கப் பட்டது . பிரமனின் மகன் தக்கன் யாகம் செய்த இடம் என்பதால் இது தக்ஷ புரம் என்றும் அழைக்கப் பெற்றது . காலப் போக்கில் மக்கள் வழக்காக பரசலூர் என்று அழைக்கப் படலாயிற்று .
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இந்த தலத்து இறைவன் இளங்கொம்பனையாள் உடனுறை வீரட்டேஸ்வரர் என்று போற்றப் படுகிறார் . சுவாமிக்கு தக்ஷபுரீஸ்வரர் என்றொரு திருநாமமும் உண்டு .
உத்திரவேதி தீர்த்தமும் , வில்வ தலமரமும் கொண்டு விளங்கும் இந்தத் திருக்கோவிலில் நவகிரக சன்னதி இல்லை . மாறாக நவகிரகங்களின் நாயகனான சூரிய பகவானின் சன்னதி மட்டுமே உள்ளது .
தக்கன் தனக்கு வரமளித்த சிவபெருமானை போற்றாமலும் , சிவபெருமானுக்கு உரிய அவிர் பாகத்தைத் தராமலும் , எல்லாவற்றுக்கும் மேலாக சிவபெருமானை அவமதிக்கும் விதமாக தானே யாகத்தை நடத்துகிறான் .
தக்கனின் ஆணவத்தை அடக்கும் வகையில் வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்து , தக்கனின் மனைவி மாங்கல்ய பிச்சை கேட்க, யாகத்தில் கிடந்த ஆட்டுத் தலையை தக்கன் உடலோடு பொருத்தி இறைவன் அருள் பாலிக்கிறான் .
இதை உணர்த்தும் விதமாக இந்தக் கோவில் கருவறையில் தக்கன் சிவபெருமானைபூஜை செய்யும் சிற்பம் உள்ளது .
திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் இந்தத் திருத் தலத்துக்கு தலபுராணம் அருளிச் செய்துள்ளார்கள் என்பது இந்தக் கோவிலுக்குக் கூடுதல் சிறப்பு .
நறுநீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த்திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறு நீடு அவலம் ,அறும் பிறப்புத் தானே ! என்று திருஞான சம்பந்தர் திருமுறை பாடி இத் திருத் தலத்து வீரட்டானேஸ்வரரை வணங்கினால் நம் வாழ்வில் இன்பங்களே தொடரும். மேலும் வாழ்வின் முடிவில் இனி பிறவி வாராத முக்தி நிலை ஏற்படும் .
இதுமட்டுமில்லை , திரு ஞான சம்பந்தர் அறுநீடு அவலம் என்று சொல்லி விட்டதால் , இந்தக் கோவிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ,மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் . நன்மக்கள் பேறும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை .