தமிழகத்தில் மோடிஅலை-தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எதிராக தினமும் ஒரு பொய்யை கூறி வருகிறார். தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என தமிழக பாஜக மாநில செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வாஜ்பாய், மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பே காரணம்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவது உறுதியான ஒன்று என்பதாலும், பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆதரவாலும் தமிழக மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.
தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்.
நோட்டாவுடன் போட்டி போடுவதாக பாஜக மீது வசை பாடியிருக்கிறார். 1996 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட வென்ற கட்சி பாஜக.
1957ல் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் திமுக இதுவரை ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. கூட்டணி பலத்தால் மட்டுமே வென்றுள்ளது.
1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய 6 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வென்று ஆட்சி அமைத்துள்ளது. 1967ல் ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் கூட்டணி, 1971 காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டதால், 1989ல் அதிமுக இரண்டாக பிளவுபட்டதால், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால், 1996ல் காங்கிரஸில் இருந்த பிரிந்த த.மா.கா., ஆதரவால், 2006ல் பெரும்பான்மை கிடைக்காமல் காங்கிரஸ், பாமக ஆதரவுடன், 2021ல் அதிமுக பிளவுபட்டதால் என்று விபத்தாகவே திமுக வெற்றி பெற்றுள்ளது.
தனித்து தேர்தலை சந்திக்க துணிவில்லாத திமுக, பாஜகவை நோக்கி நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி என விமர்சிக்க வெட்கமாக இல்லையா? திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் நான் பகிரங்க சவால் விடுக்கிறேன்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் போட்டியிடத் தயாரா? *திமுக தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் கூட பெற முடியாது. குறைந்தது 50 சட்டமன்றத் தொகுதிகளில் நோட்டாவுக்கு கீழ்தான் ஓட்டுகள் வாங்கும்.
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என திரும்ப திரும்ப பொய் பேசி வருகிறார் ஸ்டாலின். தமிழகத்தின் இன்றைய தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர்.
அடுத்தகட்டமாக,1998 முதல் 2004 வரை இருந்த வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், அதி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில் பாதைகள், தேஜஸ், வந்தே பாரத் என அதிவிரைவு ரயில்கள், துறைமுக மேம்பாடு, விமான நிலையங்கள் போன்ற உள் கட்டமைப்புகள்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம். மோடி ஆட்சியின் அனைத்து திட்டங்களிலும் அதிக பலன் அடைந்த மாநிலம் தமிழகம்தான்.
தலைநகர் சென்னையில் திமுகதான் அதிக முறை வென்றுள்ளது. ஆனால், சென்னையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் எவ்வளவு என்பதை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட முடியுமா? சென்னையில் உயர் கல்விக்கு தனியார் கல்லூரிகளைதான் மக்கள் நம்பி கொண்டிருக்கின்றனர்.
வெள்ளத்தில் சிக்கிய சென்னை உள்பட தமிழக மக்கள் அடைந்து பாதிப்புக்கு முதல்வர் ஸ்டாலினின் செயல்படாத திமுக அரசு தான் காரணம். மழை காலம் வந்து விட்டாலே சென்னை மக்களுக்கு ஈரக்குலை நடுங்கி விடுகிறது. வீதிகள் எல்லாம் படகோடும் நதிகளாகி விடுகின்றனர். இந்த லட்சணத்தில் பாஜக அரசு மக்களை வஞ்சிப்பதாக கூறுவதற்கு ஸ்டாலின் கூச்சப்பட வேண்டாமா?
2019 மக்களவைத் தேர்தலின்போது திமுகவால் கட்டமைக்கப்பட்ட மோடி எதிர்ப்பலை இப்போது இல்லை. மாறாக தமிழகத்திலும் மோடி அலை வீசுகிறது. தோல்வி உறுதி என்பதால்தான் வாய்க்கு வந்ததை எல்லாம் தனக்குதானே முதல்வர் ஸ்டாலின் ஆனந்தமடைந்து கொள்கிறார்.
பிரதமர் மோடிக்கு எதிராக தரம் தாழ்ந்து விமர்சித்து, பொய் பிரச்சாரம் செய்யும் திமுகவினரின், முதல்வர் ஸ்டாலினின் வாய்க்கொழுப்புக்கு ஏப்ரல் 19ம் தேதி தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
பிரதமர் மோடியின் தொடர் வருகையால் இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக கூட்டணி பெறப்போகும் வெற்றி திராவிட மாடலை தகர்த்து வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்தை வளர்ச்சிஎன்று பாதையில் கொண்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.