பாரதப் பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாகக் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டுச் சுற்றுலா அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது.
இந்தியா மாலத்தீவுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்து மாலத்தீவு ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இதன் காரணமாக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதனால் மாலத்தீவின் சுற்றுலா வருவாய் குறைந்து வருகிறது.
இந்நிலையில் இழந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மாலத்தீவுக்கு அழைக்கும் வகையில், அங்குள்ள உள்ள ஒரு முக்கிய சுற்றுலா அமைப்பு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட்ஷோ நடத்தத் திட்டமிட்டுள்ளது.
MATATO எனப்படும் மாலதீவுகள் சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் முதலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து இந்தியத் தூதர் முனு மஹாவருடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து ரோட் ஷோ நடத்தப்படும் என்று அறவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாலேயில் உள்ள இந்தியத் தூதருடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சுற்றுலாவை மேம்படுத்த மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “முக்கிய இந்திய நகரங்களில் ரோட் ஷோ நடத்த உள்ளோம். மாலத்தீவிற்கு இந்தியா ஒரு முக்கியமான சுற்றுலாவாக இருக்கும் அதே வேளையில், சுற்றுலாவை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முதலில் மாலத்தீவுக்குச் செல்லும் டாப் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த நிலையில், அது இப்போது 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மாலதீவுகளின் சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வரை மாலத்தீவுக்கு மொத்தமாக 6,63,269 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
அதில் அதிகபட்சமாகச் சீனாவிலிருந்த 71,995 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அடுத்து இங்கிலாந்திலிருந்து 66,999 சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து 66,803 சுற்றுலாப் பயணிகள், இத்தாலியிலிருந்து 61,379 சுற்றுலாப் பயணிகள், ஜெர்மனியிலிருந்து 52,256 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
அடுத்ததாக இந்தியாவில் இருந்து 37,417 சுற்றுலா பணிகள் மட்டுமே சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.