கக்குவான் இருமல் என்றழைக்கப்படும் தொடர் இருமல், குழந்தைகளை பெரும்பாலும் தாக்கக்கூடியது. இது ‘பெர்டுசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். இந்த தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் தான் இந்த கக்குவான் இருமலுக்கு பலியாகின்றனர்.
இந்நிலையில் சீனாவில், இந்த ஆண்டில் 32,380 பேருக்கு கக்குவான் இருமல் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 மடங்கு அதிகமாகும்.
ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த ஆண்டை விட, நோய்த்தொற்று 34 மடங்கு அதிகரித்துள்ளது.
மூன்று மாதங்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ‘போர்டெடெல்லா பெர்டுசிஸ்’ என்ற தொற்றுக் கிருமியின் வாயிலாக இது பரவுகிறது.
இது நுரையீரலின் மேல்பகுதியை தாக்குகிறது. அந்த தொற்றில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை, மூச்சுக் குழாயில் தடிப்பை ஏற்படுத்தும்.
இது, ஆரம்பத்தில் சாதாரண ஜலதோஷம் போலத்தான் ஆரம்பிக்கும். மூக்கடைப்பு, லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும். இந்த நேரத்தில் தொற்று பரவலை கண்டறிவது கடினம்.
ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அறிகுறிகள் தீவிரமடையும். மிக அதிகமான, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருமல் அதிகரிக்கும். இது 10 வாரங்கள் வரை நீடிக்கும்.
இருமல் துவங்குவதற்கு முன், நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், ‘ஆன்டிபயாடிக்’ வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடிப்பவர்களுக்கு, ஆன்டிபயாடிக் வழங்கப்படுவதில்லை.
காரணம், அவர்களின் உடலில் உள்ள தொற்று வெளியேறி இருக்கும் என கூறப்படுகிறது. மூச்சுக் குழாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருமல் நீடிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.