லடாக்கில் விபத்தில் சிக்கி கை துண்டான ராணுவ வீரரை, நள்ளிரவில் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வந்து விமானப்படை காப்பாற்றியுது.
லடாக் யூனியன் பிரதேசத்தில் லே என்னும் பகுதி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 ஆயிரத்து 680 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அங்கு இந்திய விமானப்படையால் பராமரிக்கப்பட்டு வரும் உலகிலேயே மிக அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு இந்திய ராணுவத்தின் படைப் பிரிவு ஒன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படைப் பிரிவிற்கு தேவையான பொருட்களை தயாரிப்பதற்கான சிறு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
அங்கு இங்கே ஏராளமான ராணுவப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி இரவு, ராணுவப் பணியாளர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கை இயந்திரத்திற்குள் சிக்கியது.
இதில் அவரது இடது கை மணிக்கட்டுக்கு கீழே இரண்டு துண்டானது. உடனடியாக அவரை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் மட்டுமே அவரது கையைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இரவு வேலைகளில் இந்த விமான நிலையத்தில் இருந்து விமானத்தை இயக்குவது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஆனால், ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக இந்திய விமான படையின் ஐஏஎஸ்-சி130 ஜே என்ற விமானத்தை இரவில் இயக்க முடிவு செய்தது.
இதன்படி லடாக்கில் இருந்து உடனடியாக விமான மூலம் ராணுவ வீரர் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கிருந்து டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
தற்போது அந்த ராணுவ வீரர் நலமுடன் இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இன்று, ராணுவ வீரருடன் சிகிச்சையளித்த மருத்துவர்களின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.